GuidePedia

0
தண்ணீர் எதிர்கால தட்டுப்பாடு (கட்டுரை)
தண்ணீர் பற்றாக்குறை
(By SgS)
வெயில் காலம் வந்துவிட்டது. இப்போதே பல கிராமங்களில், பல மைல் தூரம் ஒரு குடம் தண்ணீருக்காக நடக்க துவங்கிவிட்டனர். இத்தனை நாள், இது எங்கோ கிராமத்தில் இருக்கும்,  நமக்கு சம்மந்தம் இல்லாத மக்களின் பிரச்னை என்று பேசிவந்தோம். ஆனால், இனி நாம் அப்படி மாற்றான் பிரச்னையாக கருத முடியாது. ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் ஆபத்து வந்துவிட்டது. இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் அதன் பத்து வயதில் தண்ணீருக்காக பிச்சை எடுக்க கூட நேரலாம். ஆம், 2025 -ல் இந்தியாவில் மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
அரசே ஒத்துக் கொள்கிறது:



சில ஆண்டுகளுக்கு முன்பு, The world watch என்ற அமைப்பு, “நாம் வாழும் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படாத உலகளாவிய சுற்றுச்சூழல் சவால் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கலாம்” என்றது. ஆனால், அது நிஜமாகிவிட்டது. அரசின் புள்ளிவிபரங்களே, ‘2050 ல், இந்தியா ஒரு மோசமான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும்’ என்கிறது. இனியும், தண்ணீருக்காகதான் போர் ஏற்படும் என்று பேசுவதை மற்றொரு அபத்தம் என்று நாம் சுலபமாக கடந்து சென்றுவிட முடியாது. 
அண்மையில், பாராளுமன்ற கேள்வி நேரத்தில் பேசிய நீர் வளங்களுக்கான மத்திய இணை அமைச்சர் சன்வார் லால் ஜாட், “ஒரு தனியார் ஆலோசனை நிறுவனம் எடுத்த ஆய்வில், இந்தியா 2025 ல், தனது மக்களுக்கு அளிக்க போதுமான நீர் இன்றி தவிக்கும்” என்கிறது. ஆனால், 1999-ம் ஆண்டு முதல் உள்ள புள்ளி விபரங்களின்படி, அவ்வளவு விரைவில் தண்ணீர் பிரச்னை வராது. ஒரு வேளை, 2050 ல் வரலாம்.” என்றார்.
அவர் சொல்லும் கணக்கையே எடுத்துக் கொண்டால் கூட,  நிச்சயம் அடுத்த தலைமுறை மோசமான தண்ணீர் பிரச்னையை சந்திக்கும். ஆனால், நடந்து கொண்டிருக்கும் அபத்தங்களை ஆய்வு செய்தால் பிரச்னை அவ்வளவு தொலைவில் இல்லை என்று தெரிகிறது.



நாசா எச்சரிக்கிறது:

இது மட்டுமல்லாமல், அண்மையில் நாசா வெளியிட்டுள்ள செயற்கைகோளிலிருந்து எடுக்கப்பட்ட படம், வட மாநில மாநகரங்களான டெல்லி, ஜெய்ப்பூரில் நிலத்தடி நீர் அளவு மோசமாக குறைந்து வருவதை காட்டுகிறது. நாம் உடனடி நடவடிக்கை எடுக்க தவறுவோமாயின், ஏறத்தாழ 11 கோடி மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டி காட்டுகிறது.     
பல்வேறு வடிவங்களில், ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கிடைக்கும் நீரின் அளவு 1123 பில்லியன் கன மீட்டர். சென்னை மாநகரத்தை ஒரு பெரிய தண்ணீர் தொட்டியாக மாற்றினால், இந்த தண்ணீரை நிரப்பிவிடலாம். இதில் 690 பில்லியன் கன மீட்டர் நீர், மேற்பரப்பு நீர் ஆதாரங்களான, ஏரிகள், ஆறுகள் மூலம் பெறப்படுகிறது. மிச்ச நீரை நாம், நிலத்தடி நீர் மூலமாக பெறுகிறோம். ஆனால், நாம் தொடர்ந்து உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் படு மோசமாக குறைந்து வருகிறது.
1999 ம் ஆண்டு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி,  2025 ல் இந்தியாவின் தண்ணீர் தேவையாக 843 பில்லியன் கன மீட்டர் இருக்கும். இது 2050 ம் ஆண்டு, 1180 ஆக உயரும். ஆனால், அதன் பின்புதான் இந்தியாவில் அதிகமான தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன, இந்தியாவின் முக்கிய நீராதரமாக இருக்கும் கங்கையும் படு மோசமாக பாழடைந்தது. கங்கை மட்டும் அல்ல, தொழிற்சாலைகள் தனது கழிவுகளை எந்த சுத்திகரிப்பும் செய்யாமல் ஆறுகளில் விடுவதாலும், பெரும் அணைகள் கட்டப்படுவதாலும், இந்தியாவில் உள்ள 275 ஆறுகள் படுமோசமாக மாசடைந்துள்ளன. அதனால், நிச்சயம் தண்ணீர் பற்றாக்குறை அரசு கணித்திருப்பதற்கு முன்பே வரும்.
நிலத்தடி நீர் வற்றுகிறது:
இந்தியா,  தன் 40 சதவீத தண்ணீர் தேவைக்காக, நிலத்தடி நீரை நம்பி இருக்கிறது. அதுவும் குறிப்பாக, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் 100 சதவீதமும், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா 70 சதவீதமும் தம் தேவைக்காக நிலத்தடி நீரை நம்பி இருக்கிறது. இதுதான் படுமோசமாக நிலத்தடி நீர் குறைந்து போக காரணமாக இருக்கிறது. முன்பே, தமிழகத்தில் 95 சதவீத கிணறுகள் வற்றிவிட்டன. மிச்சம் இருக்கும் கிணறுகளில் ஆண்டுக்கு 5 அடி வேகத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.







முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top