GuidePedia

0


குண்டுச் சத்தங்களாலும் பிணவாடைகளாலும் மரண ஓலங்களாலும் ரசாயன வாயுவாலும் நிரம்பியிருந்த முள்ளிவாய்க்கால் உணர்வுள்ள தமிழன் மனதின் ஆறாத வடுக்கள்....

அண்ட சராசரம் வரை
ஓங்கியொலித்த குரல்களுக்கு
செவி சாய்க்கா வுலகின் மெத்தனத்தால்
பதுங்கி குழிக்குள்
பதுங்கியது பல்லாயிரம் உயிர்கள்...

வழி நெடுகிலும் கண்ணீர்க்கோடுடன்
வேறு வழியின்றி
முட்கம்பிக்குள் முடங்கிய தமிழினத்தின்
கனவுகள் முறிந்தே போனது....
ஆடைகளை எடுக்கவேனும்
அவகாசம் தராது, துகில் உரியப்பட்டு
அநாதரவாய் நின்றவர்க்கு
ஒட்டுத்துணியேனும் தந்து
தமிழ் மானம் காக்க
பரமாத்மவேனும் வரலியே ...

இன அழிப்பின் வெற்றிக் களிப்பில்
பிணங்கள் தேடும் கழுகுகளாய்
மானமுள்ள மங்கைகளின்
உயிரற்ற உடலை
இச்சையோடு பிச்சுண்ட
பிணம் தின்னிகளை இன்னும்
தாங்கித் தான் சுழல்கிறது பூமி....

மங்களமான வாழ்வினை அமங்கலப்படுத்தி
கைம்பெண் என்ற வார்த்தையில்
மட்டும் பொட்டிட்டு
வாழ்வோடு போராடும் பெண்களை
பிரசவித்தது இந்த முள்ளிவாய்க்கால் ...

சாகடிக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டவர்கள்
அழிக்கப்பட்டவைகள்,
மௌனமாக்கப்பட்டவைகளென
வெந்த மண்ணுக்கே தெரியும்
வேதனையின் உச்ச கட்டம் ....

சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட
ஈழ இனப்படுகொலையின்
சாட்சியங்கள் ஒவ்வொன்றும்
சாட்சியாக நின்றும்
மறுக்கபடுகிறது நீதி இற்றைவரை
தமிழர் வாழ்வில்...

முள்ளிவாய்க்கால்
மூடப்பட்ட புதை குழியல்ல -
அது விதைக்கப்பட்ட
எம் உறவுகளின் ஆத்ம தரிசனம்...




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top